பொன்னியின் செல்வன் (சுருக்கம்) – 96
(தியாக சிகரம் – ஐந்தாம் பாகம்- அத்யாயம் 90,91)

ஆனைமலை சம்பவங்கள் வந்தியத்தேவனின் கற்பனை இல்லையே என்று கேலி செய்து அங்கு நந்தினியை சந்தித்தானா என்று கேட்கிறாள் குந்தவை. அவளை விஷநாகம் என்று குறிப்பிட்டு அவள் பேச்சு எதற்கு என கேட்க ஒரு காலத்தில் தானும் அவ்வாறே நினைத்ததாகவும் ஆனால் தற்போது எண்ணிப்பார்க்க அவள் மீது இரக்கம் பிறப்பதாக கூறுகிறாள்.

தன் பழிவாங்கும் நோக்கம் நிறைவேற பழுவேட்டரையரை பொம்மையாக ஆட்டுவித்தவள் என்று வந்தியத்தேவன் சொல்ல அதை ஆமோதித்து கந்தமாறன் பார்த்திபேந்திரன் போன்றோரையும் பயன்படுத்திக்கொண்டாலும் அருள்மொழிவர்மனை பல முறையும் இறுதியில் சுந்தர சோழரின் உயிரையும் காப்பாற்றிய மந்தாகினியின் மகள் என்கிறாள்.

நந்தினியின் தந்தை குறித்த பேச்சு வர அவள் பாண்டியனின் மகள் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னது நிஜம் தானா என கேட்கிறாள். அதை தானே காதல் கேட்டதாகவும் அதை கேட்டதால் தான் பழுவேட்டரையர் ஆவேசம் கொண்டார் என்கிறான் வந்தியத்தேவன். ஒருவேளை அவரை வெறிகொள்ள வைக்க அவ்விதம் சொல்லியிருக்கலாம் என்கிறாள்.

வீரபாண்டியன் மரண நேரத்தில் காதலன் என சொன்னதால் பெற்ற தகப்பனை ஒருவள் அவ்விதம் சொல்வது நெருடலாக இருப்பதை குந்தவை குறிப்பிட அவள் என்ன சொன்னாளோ வெறிகொண்ட ஆதித்த கரிகாலன் காதில் எப்படி விழுந்திருக்குமோ என சொல்லி நந்தினிக்கு தன் தந்தையை அறியும் துடிப்பில் சக்ரவர்த்தியை பயமுறுத்தியதை குறிப்பிடுகிறான்.

பைத்தியக்காரனை ஆழ்வார்க்கடியான் பயமுறுத்தி கேட்க தானே தகப்பன் என்று சொல்லியதை குந்தவை சொல்ல சில நேரங்களின் பொய் மிக வலிமையுடையதாக இருக்கிறது என்கிறான். கோழை என்று எண்ணிக்கொண்டிருந்தவன் சின்னப்பழுவேட்டரையருக்கு சமதையாக வாள் வீசியதை தன்னால் மறக்கமுடியாது என்கிறான்.

எது எப்படியோ அவள் தாய்க்காகவும் பலமுறை வந்தியத்தேவனை காப்பாற்றிய நன்றிக்காகவும் அவளிடம் தனக்கு அன்பு இருப்பதை சொல்கிறாள். தன்னை தீரா பழியில் சிக்க வைக்க அவள் செய்த தந்திரங்கள் என்று சொல்ல அவையெல்லாம் அவன் மீது அவள் கொண்ட காதலால் அவனை சோழ குலத்திலிருந்து பிரிக்க நடந்த திட்டங்கள் என்கிறாள்.

ஒன்றுக்கு இரண்டாக பாண்டிய வாரிசுகளை தயாரித்திருக்கும் ரவிதாஸனின் சாமர்த்தியத்தை சொல்லி அமர புஜங்க நெடுஞ்செழியன் என்ற மதுராந்தகனின் புதிய பெயரை சொல்கிறான். பழுவேட்டரையர்கள் இல்லாத சோழ தேசத்தை அபாயங்கள் சூழும் நேரம் தோள்வலியும் மதிநுட்பமும் வாய்ந்த துணை பொன்னியின் செல்வருக்கு தேவை என்கிறாள்.

பேச்சுவாக்கில் பார்த்திபேந்திரன் குந்தவையை மணமுடிக்க சக்ரவர்த்தியிடம் கோரிக்கை வைத்ததையும் தான் நிராகரித்ததையும் சொல்கிறாள். அனாதையான தனக்கு அவளை மணமுடித்து தர கேட்க இனி தகுதியை பெறப்போவதாகவும் பொன்னியின் செல்வருடன் இணைந்து வெற்றிகளை குவித்து அதன் பிறகு பெண் கேட்பதாகவும் சொல்கிறான்.

பழப்பெருமை பேசி பெண் கேட்ட பல்லவனுக்கும் வந்தியத்தேவனுக்குமுள்ள வித்யாசத்தை வியந்து எத்தனை காலமானலும் அவனுக்காக காத்திருப்பதாக சொல்ல அவள் சொற்கள் அவனை அமுதம் உண்ட அமரனாக மாற்றிவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் கந்தமாறனிடமிருந்து அவசர ஓலை வந்திருப்பதாக ஓடி வந்து தெரிவிக்கிறாள் வானதி.

முதல் முதலாக சோதிடர் வீட்டில் ஏற்பட்ட சந்திப்பை வானதி நினைவூட்ட ஏற்படும் குதூகலம் அவள் கொண்டு வந்த ஓலையை படித்ததும் மறைகிறது. மணிமேகலையை கடைசி முறையாக சந்திக்க வர அனுப்பியிருக்கும் செய்தி அவனை சோகத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் காணாமல் போனவள் கிடைத்துவிட்டது ஆறுதல் என்கிறாள் குந்தவை.

மணிமேகலை குறித்து எதுவும் அறிந்திராதவன் ஆச்சர்யத்துடன் வினவ செம்பியன்மாதேவி தன்னுடனே அவளை வைத்துக்கொள்ள வற்புறுத்தியும் சம்புவரையர் பிடிவாதமாக அழைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார். வீர நாராயண ஏரிக்கருகே கூடாரம் அமைத்து ஓரிரவு தங்க நேர்ந்திருக்கிறது. அங்கே காணாமல் போய்விட்டாள் என்று கடைசியாக தகவல் வந்ததை சொல்கிறாள்.

இருவரும் அவனை உடனே கிளம்ப சொல்ல வந்தியத்தேவன் தயங்குகிறான். தெய்வத்திடம் வைக்க வேண்டிய அன்பை தன்னிடம் வைத்த மணிமேகலைக்கு தான் சற்றும் தகுதியில்லாதவன் என்று எண்ணினாலும் கடைசி முறை என்ற சொற்கள் அவனை கிளம்பவைக்கிறது.

ஒரு நாள் பயணம் பல யுகமாக படுகிறது. எட்டு மாதங்களில் நடைபெற்ற சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆழ்வார்க்கடியான் பூங்குழலி நந்தினி சேந்தன் அமுதன் பழுவேட்டரையர் என்று யாரார் மூலமோ தனக்கு கிடைத்த உதவிகள் தெய்வத்தின் கருணையோ என்று நினைத்து பார்க்கிறான்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் அவன் மீது கொண்ட அன்பின் காரணமாக மணிமேகலை கொலைப்பழி ஏற்றுக்கொண்டது. அந்த பிள்ளை உள்ளத்தை பிச்சியாக்கியதில் தனக்கும் பங்குண்டு என்ற எண்ணம் வந்தியத்தேவனை வாட்டி வதைக்கிறது. வீர நாராயண ஏரி ஆடிமாதம் பார்த்தது போல அல்லாமல் நீர் குறைந்து அமைதியாக இருக்கிறது.

ஏரிக்கரையில் கந்தமாறன் அவனை படகில் ஏற்றிக்கொள்கிறான். மணிமேகலை காணாமல் போய் நான்கு நாட்கள் காடுகளிலும் ஏரியோரத்திலும் தேடி கடைசியில் நீராழி மண்டபம் நினைவு வர அங்கே உருக்குலைந்த மேனியாக அவளை கண்டுபிடித்ததை சொல்லி அவள் உயிர் பிரிந்துகொண்டிருப்பதையும் நினைவு திரும்பிவிட்டதையும் சொல்கிறான்.

தான் சொர்க்கத்திலிருப்பதாக அவள் எண்ணிக்கொண்டிருப்பதால் அதை ஒட்டியே அவளிடம் பேசுமாறு வேண்டுகிறான். மண்டபதை அவர்கள் அடையும் நேரம் யாழ் மீட்டி பாடிக்கொண்டிருக்கிறாள். வந்தியத்தேவனை கண்டு பரவசத்தில் எழுந்திருக்க முயல ஓடிவந்து அவளை மடியில் தாங்கிக்கொள்கிறான். அவனையும் மீறி கண்ணீர் துளிர்க்கிறது.

அவள் வாய் சிந்தும் வார்த்தைகள் அவனுக்கு கேட்கவில்லை விளங்கவுமில்லை. ஆனால் இதயத்தின் பாஷைக்கு எதுவும் தேவையாக இருக்கவில்லை. அவன் முகத்தை பார்த்தபடி மணிமேகலையின் உயிர் சுடர் அடங்குகிறது. அவன் இதயத்தினுள் தெய்வமாக குடிகொள்கிறாள்.

வேடிக்கை விளையாட்டு குறும்பு குதூகலம் என்று இருந்த வந்தியத்தேவனும் அன்றோடு மறைந்து போகிறான். அன்பும் கருணையும் விவேகமும் அவனை வந்தடைகின்றன. அவனுள் கலந்துவிட்ட தெய்வம் அவனது எதிர்கால சாதனைகளுக்கு துணை நிற்கும்.

(நிறைந்தது)

V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்
(மூலக்கதை- கல்கி)