இமய மலையை எறும்பு சுமக்க முடியுமா?..தெய்வத்தின் அருளாலும் ஏதோ விதத்தில் என்னை ஆட்கொண்டு எழுத வைத்த கல்கியின் ஆசியாலும் சாத்தியமாகியிருக்கிறது..இது கனவில்லையே என்று இன்னமும் என்னையே கிள்ளி பார்த்துக்கொள்கிறேன்..

பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எம்ஜியார் ஆசைப்பட்டார் கமலஹாசன் ஆசைப்பட்டார் என்று படித்திருக்கிறேன். அவர்களுக்கு அது சாத்தியமாகாமலே போய்விட்டது.

நண்பர் முரளியிடம் கூட அவரின் நண்பர்கள் இதை சுருக்கி தர கோரிக்கை வைத்ததாகவும் நான் முந்திக்கொண்டு விட்டதாகவும் சொல்லியிருந்தார். இதை எழுத ஆரம்பிக்கும் முந்தைய நாள் வரை கூட அப்படி ஒரு நினைவே இல்லாது இருந்த என் மூலம் இந்த சுருக்கம் வந்திருப்பது இறை செயலின்றி வேறில்லை.

பொன்னியின் செல்வனை அறிமுகம் செய்து வைத்தது என் தமக்கை. அதுவும் எப்படி? தன்னையே குந்தவையாகவும் என்னையே பொன்னியின் செல்வனாகவும் நினைத்து கையில் சங்கு சக்ர ரேகையை தேடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போது மிஞ்சி மிஞ்சி போனால் அக்காவுக்கு பத்து வயது இருக்கலாம் எனக்கு ஏழரை (வயதில் தான்..)..

இதில் நான் இப்போது நினைத்து ஆச்சர்யப்படும் விதமாக எங்கள் இருவருக்கும் மூத்ததாக ஒரு குழந்தை பிறந்து இறந்தும் போயிருக்கிறது (ஆ.க? – புள்ளியுடன் சேர்த்து படிக்கவும். முக்கிய புள்ளியுடன் சேர்த்து அல்ல..). இன்னொரு விதத்திலும் நான் பொன்னியின் செல்வனே. பொன்னி நதி கரையில் மாயூரத்தில் ஊறி உதித்து பிறந்தவன்.

கல்கி எழுதியதை கிட்டதட்ட கால் பங்காக சுருக்கி எழுதியதால் டாக்டர் வேதவல்லி அவர்களின் பின்னூட்டத்தில் கால்கி என்று ஒரு முறை வேடிக்கையாக குறிப்பிட்டேன். கல்கி பிறந்ததும் மாயூரம் என்பதில் கூடுதல் பெருமை. ஆனால் நான் மட்டுமல்ல இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் பொன்னியின் செல்வன்கள் தான் பொன்னியின் செல்விகள் தான்.

வந்தியத்தேவனும் பொன்னியின் செல்வனும் ஆதித்தகரிகாலனும் குந்தவையும் நந்தினியும் பூங்குழலியும் நம்முடனேயே உணர்வில் கலந்திருக்கின்றனர். அதனால் தான் அவர்களின் சாதனைகளிலும் சந்தோஷங்களிலும் நாம் குதூகலிக்கிறோம். அவர்களை சோதனைகளும் சோகமும் சூழும் போது நாமும் கண்ணீர் சிந்துகிறோம்.

சோழ தேசத்தில் வானுயரந்து நிற்கும் பெரிய கோவில் மட்டுமல்ல கண்ணில் படும் சின்னங்கள் எல்லாமே ஏதோ விதத்தில் ராஜராஜ சோழனை நினைவூட்டும். சோழர்களின் வழியான குடவோலை தேர்தல் முறையை ”கட்சிகளில்லாத ஜனநாயகம்” என்று ஒரு புது வித தேர்தல் முறையாக நான் செப்பனிட்டு வைத்திருப்பதை அறிந்திருப்பீர்கள்.

2019 ஆகஸ்ட் மாதம் செட்டிநாட்டில் நண்பர்களுடன் அளவளாவி ஆவுடையார்கோவிலை தரிசித்து ராமேஸ்வரத்துக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். தொலைவில் ஒரு கலங்கரை விளக்கம் கண்ணில் பட உடனே பொன்னியின் செல்வன் நினைவு வந்து குழகர் இருக்கும் இடமோ என்று பரபரத்தேன்.

அந்த பகுதியில் வசிக்கும் நண்பர் தர்மராஜனை உடனே போனில் பிடித்து விசாரிக்க அவர் சிரித்து ஜியாகிரபியில் நான் வீக் என்பதை புரிந்துகொண்டு அது நாகைப்பட்டினத்துக்கு தெற்கே அமைந்திருக்கும் இடம் என்றும் நான் வந்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டரில் இருக்கும் என்றார்.

ஏன் சொல்கிறேன் என்றால் பொன்னியின் செல்வனில் வரும் ஒவ்வொரு இடமும் பாத்திரமும் நம்முடன் பொக்கிஷமாக பொதிந்திருக்கிறது. நண்பர் சிவாவின் இல்லத்தில் இதை வைத்து வீட்டிலேயே குவிஸ் நடத்துவார்கள் என்றால் கல்கியின் காவியத்தில் நமது ஈர்ப்பு புரியும்.

இதனால் தான் இந்த தொடரை ஆரம்பித்தபோது ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. ஆனால் தெரிந்த கதையை ஏன் திரும்ப படிக்கவேண்டும்..ஒரிஜினல் போல இல்லையே..நீளமாக இருக்கிறதே..பாத்திரங்களை நினைவு வைக்க முடியவில்லையே..போன்ற ஏதேதோ காரணங்களால் வரவேற்பு குறைந்து போனது.

இதுவும் கூட பொன்னியின் செல்வனின் பிரதிபலிப்பு என்றே தோன்றுகிறது. இந்த கதை ஆரம்பிக்கும் இடமும் முடியும் இடமும் ஒன்று தான் சிலர் ஏற்கனவே கவனித்து குறிப்பிட்டீர்கள். வீரநாராயண ஏரி கரையில் வந்தியத்தேவன் அறிமுகமாவதில் தொடங்கி அதே இடத்தில் மணிமேகலை மரணத்தோடு முடிந்திருக்கும்.

ஆடிப்பதினெட்டில் மடைகளில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம் கடைசி காட்சியில் காணாமல் போய் சலசல என சிற்றோடையாக சோகமாக ஓடும். அது போல தான் தேடி படிப்பவர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வேன். யாரையும் குறை சொல்லவில்லை, ஒரு ஒற்றுமைக்காக சொன்னது.

ஆனாலும் முதல் நாளில் படித்த அதே ஆர்வத்துடன் சிலர் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்ததை மறக்க முடியாது. ஐயோ முடியப்போகிறதே என்று இறுதி கட்டங்களை எழுதுகையில் எனக்கிருந்த வேதனை படிக்கும் உங்களையும் பிடித்துக்கொண்டதை நெகிழ்வுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

Tag செய்து ஒவ்வொரு பதிவிலும் அழைத்தால் படிப்பதாக சிலர் சொன்னார்கள். பணிவுடன் அதனை மறுத்துவிட்டேன். நல்ல காபி கொஞ்சம் குடித்தால் போதும் என்று சொல்வார் வாரியார். சிறந்த ரசிகர்கள் படித்திருக்கின்றனர். இனி செவ்வாய்களும் வெள்ளிகளும் வெறுமையாக இருக்கும் என்று சொன்ன வார்த்தைகள் தந்த திருப்தி போதும் எனக்கு.

ஒவ்வொருவருக்கும் கோடி நன்றி சொல்லிக்கொள்கிறேன்!!

ஒரு அக்காவை பற்றி ஆரம்பத்தில் சொன்னேன். உடன் பிறவாத இன்னொரு அக்காவான ஓவியர் விஜி பற்றி இறுதியில் சொல்கிறேன். இவரின் அர்ப்பணிப்பையையும் உழைப்பையும் ஈடுபாட்டையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனையோ இடர்களிடையே தீராத ஆர்வத்துடன் படங்களை வரைந்து தந்திருக்கிறார். நன்றி செலுத்த பழுவேட்டரையர் பொக்கிஷத்தை தான் திறக்கவேண்டும்.

அடுத்ததாக சிவகாமியின் சபதத்தை எழுத சொல்லி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தார் விஜி. இந்த தொடர் முடிந்த பின் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். இது மிகப்பெரும் வேலை, எழுதி பார்த்தால் தான் தெரியும். கோவிட் சிறை வைத்ததால் ஒரு உருப்படியான வேலையாக இதை செய்தேன். சிவகாமிக்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.

இந்த சுருக்கத்தை கூட புத்தகமாக வெளியிடலாம் என்று யோசனை கூறினீர்கள். முயற்சி செய்கிறேன். அன்பர் ஒருவர் தொடர் முடிந்ததும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகவும் சொல்லியிருந்தார். இதில் எது நடக்குமோ. PDF வடிவில் முழு தொடரையும் மாற்றி தரும்படியும் சிலர் கேட்டிருந்தீர்கள். இது என் சக்திக்குட்பட்டது. விரைவில் முடிக்கிறேன்.

இந்த படைப்பில் குற்றம் குறைகள் இருந்தால் அது என்னையும் உங்களுக்கு சந்தோஷமும் நிறைவும் தந்திருந்தால் அந்த பெருமை முழுவதும் அமரர் கல்கியையும் சேரவேண்டும். அவரது கரும்புக்கட்டில் நான் ஜூஸ் போட பழகிக்கொண்டேன். என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவம் என்றால் மிகையில்லை.

என் அப்பாவின் பிறந்த நாளில் (19-May-20) தொடரை ஆரம்பித்தேன். இந்த Epilogue வெளியாகும் இந்த நாள் (25-Apr-21) அவரின் நினைவு நாள். பித்ரு கர்மாவை முடித்துவிட்டு வந்து தான் வெளியிடுகிறேன். இது அவருடைய ஆசிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்..

உடன் பயணித்த ஒவ்வொருவருக்கும் …மீண்டும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி !!

V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்