அதிகாலை ஒரு வாக்கிங் அப்படியே ஒரு ஷாப்பிங். அந்த நேரத்தில் எந்த கடை திறந்திருக்கும்? காய்கறி மார்க்கெட் தான். வழியில் ஏடிம்-மில் பணம் எடுத்தேன். ஐம்பது டாலர்களாக வந்தது. மார்க்கெட்டில் சில்லறை மாற்றிக்கொள்ளலாம் என்று அசால்ட்டாக வந்துவிட்டேன்.

அந்தந்த மண்ணில் விளைந்த பழங்களை மட்டும் சாப்பிட சொல்லி அடிக்கடி சித்த மருத்துவர் சிவராமன் பயமுறுத்துவதால் ஆப்பிள் ஆரஞ்சு கிவி போன்ற தொலை தேச பழங்களை தவிர்த்து பக்கத்து நாடான மலேஷியாவில் விளையும் பப்பாளி வாழை பழங்களை மட்டும் வாங்கும் வழக்கம் வைத்திருக்கிறேன்..

அதன்படி பப்பாளி + ஒரு சீப் வாழைப்பழம் வாங்கினேன். 2.90 என்று சொன்னாள் கடைக்கார பெண்மணி. 50 டாலருக்கு சில்லறை இல்லை. பர்ஸை கவிழ்த்து பார்த்தேன். ஒரு இரண்டு டாலர் நோட்டும் சில்லறையாக 40 காசும் இருந்தது. நான் யோசனையோடு பார்க்க எல்லாம் போதும் என்று பிடுங்கி கொண்டாள். ஆச்சர்யத்தோடு நகர்ந்தேன்.

14 வருடங்களாக வரும் மார்க்கெட். பளபள கடைகளை விட பாட்டி தாத்தாக்கள் நடத்தும் கடைகளுக்கு வாடிக்கை. அதிலும் ஒரு பாட்டி என்னை பார்த்து நீ டாக்டரா? கையெல்லாம் சுத்தமாக இருக்கிறதே என்று ஐஸ் வைத்ததிலிருந்து அவரிடம் ஏதானும் வாங்காமல் வருவதில்லை. கொஞ்சம் காய் வாங்கி சில்லறை மாற்றினேன்.

மீண்டும் பழக்கடையை தாண்டும் போது மீதி சில்லறையை கையில் வைத்தேன். எதுவும் வாங்காமல் ஏன் காசு தருகிறான் என்று குழம்பியவள் என்னை ஏறிட்டு பார்த்து அடையாளம் கண்டுகொண்டு நோ பிரதர் நோ பிரதர் என்று என் பாக்கெட்டிலியே மீண்டும் அந்த காசுகளை போட்டுவிட்டாள்.

எதிர்கடை பெண்மணி இதை பார்த்துக்கொண்டிருந்தவள் அவள் கடையில் இன்னும் சில காய்களை வாங்கி பில் போடும் போது மிக குறைந்த விலை சொல்லி போதும் போதாதற்கு You are very nice brother என்று பாராட்டு பத்திரம் வாசித்து ஒரு உருளைக்கிழங்கை கொசுறாக போட்டு தந்தாள்.

சில வருடங்களுக்கு முன் ஒரு பாட்டி இருந்தார். காய்களை நசுக்கி பார்த்து வாங்கினால் காச் மூச் என்று கத்துவார். ஆனாலும் என்னிடம் பிரியம். பாட்டிகள் விரும்பும் பேரன். பெரிதாக காரணம் ஒன்றுமில்லை. மறதியில் ஒரு நாள் அதிகமாக கொடுத்த சில்லறையை கொஞ்சம் வேடிக்கையாக பேசி திருப்பி கொடுத்தேன்.

இந்தியாவிலோ இங்கேயோ இது போன்ற சாதாரணர் கடைகளில் பேரம் பேசுவதை பாவம் என்று நினைப்பேன். அவர்களில் 90 % மிக நியாயமான விலையை தான் சொல்வார்கள். அப்படியே விலை அதிகம் என்றாலும் தெரிந்தே கூட ஏமாறுவேன்.

ஆனால் நாம் காட்டும் பரிதாபத்தை விட அவர்கள் திருப்பி தரும் அன்பு நூறு மடங்கு..சொல்ல தெரியாத நிறைவுடன் வீடு நோக்கி நடந்தேன்..மனதில் இந்தியன் பட பாடல் வரிகள் ஒலித்தது..

அட..சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…!!