“அண்ணா..இன்னிக்கு சாயந்தரம் பிரீயா..டின்னருக்கு வரமுடியுமா..?”

அழைத்தது அனு ராஜேஷ்..பேஸ்புக்கில் நட்புக்கள் ஆயிரத்தை நெருங்கினாலும்..நேருக்கு நேராக சந்திக்க கூடிய நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..

சில வருடங்களுக்கு முன் என் ப்ளாக்கில் குடிவந்து ஏற்பட்ட அறிமுகம் அனு..கணவர் ராஜேஷ்..ஆண் பெண் இரண்டு அழகான குழந்தைகள்..அவர்கள் வளர்ந்து வருவதால் இப்போது இதே ப்ளாக்கில் சற்று பெரிய வீட்டுக்கு குடி புகுந்திருக்கின்றனர்.

கோவிட் கெடுபிடிகளால் எல்லாரையும் அழைத்து கிரகப்பிரவேசம் செய்ய வழி இல்லாததால் வீட்டோடு முடித்துக்கொண்டு நண்பர்களை சௌகர்யம் போல அழைத்து விருந்தளித்து மகிழ்கின்றனர்..வியாழன் எனக்கு அடித்தது லக்கி ப்ரைஸ்..

ஒரு ப்ளாக்கில் எல்லா வீடுகளும் ஒரே போல தான் இருக்கும் என்ற அறியாமையில் இத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பது உள்ளே நுழைந்ததும் புரிந்தது. இவன் வேற மாதிரி என்பது போல இது வேறு விதமான வீடு. ஒரு சிறிய ரிஷப்ஷன் பவுண்டைன் கணபதி மணி பிளாண்ட்டுடன் வரவேற்றார்.

பெரிய ஹால்..எதிரே டிவி கேபினெட் ..மேலே 90 களின் இறுதியில் விஜய் படங்களில் பிங்க் பச்சை நீலம் என்று சட்டை கலர் கிராபிக்சில் மாறுவது போல் கலர் மாறும் பால்ஸ் சீலிங் லைட்..கூடை ஊஞ்சல் பெண் குழந்தையின் ஆசைக்காக..

மூன்றடுக்கு கோபுரம் வைத்த அழகான பூஜை கேபினெட்..மலேஷிய தயாரிப்பு..மரத்திலேயே நுண்ணிய வேலைப்பாடுகள்..வியாழன் அல்லவா நடுநாயகமாக பூஜை செய்த ஷீரடி சாய் பளிங்கு சிலை மேனி..சுற்றி இதர சுவாமி படங்கள்..கும்பகோணம் வீரபத்திரர் அவர்களின் குலதெய்வம்..அதிகம் பார்த்திராத படம்..

ஹால் ஓரத்தில் கிச்சனுக்கு நுழையும் இடத்தில் தொங்கும் விளக்குகளுடன் ஒரு குட்டி டைனிங் ஹால்..அங்கே கொட்டிக்கொண்டதை அப்புறம் சொல்கிறேன்..கலர்புல் மாடுலர் கிச்சன்..L ஷேப்பில் இருந்ததை Loveable ஷேப்பிற்கு ரீமாடல் செய்து மாற்றிவிட்டிருக்கிறார் அனு..

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்..பணம் செலவழித்தால் வேண்டியதை செய்து தர ஆட்கள் உண்டு..இண்டீரியர் டிசைன் எல்லாம் மிக சமீப காலத்தில் காசு பிடுங்க வந்த சமாச்சாரங்கள் என்றாலும் நாம் தினம் புழங்கும் வீட்டை அழகாக்க கூடுதலாக செலவழிப்பதில் தவறில்லை..

ஆனால் நமக்கு என்ன வேண்டும்..எந்த இடத்தில் என்ன செய்தால் அது அழகாக இருக்கும் என்பது அவரவர் அழகுணர்ச்சி சம்பந்தப்பட்டது..ராஜேஷ் அனு இருவருக்கும் கலைஞானம் அதிகம்..ரசனையோடு அலங்கரித்திருப்பது திரும்பும் பக்கமெல்லாம் தெரிகிறது..

இவர்களுக்கு முன்னால் இருந்த சீன மாது ஒரு ஆர்ட்டிஸ்ட்..வீட்டிலுள்ள கலைப்பொக்கிஷங்களில் பாதி அவர் கைப்பட செய்தது..அவரின் அழகுணர்ச்சி ஹாலில் ஆரம்பித்து டாய்லெட் பைப் வரை தெரிகிறது..கம்மோடு மேலே ஏறி நின்று கலை வளர்த்திருக்கிறார்..

மாஸ்டர் ரூமில் ‘முக்கிய’ ரூமை காணவில்லை..ஜீபூம்பா சொல்லி வார்ட்ரோப் கதவை திறந்தால் உள்ளே ஒளிந்திருக்கிறது..எல்லாம் அந்த ஆர்ட்டிஸ்ட் ஐடியா தான்..கன்சீல்ட் வயரிங் தான் தெரியும்..கன்சீல்டு பாத்ரூம் இப்போது தான் பார்க்கிறேன்..

சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா, அடை + அவியல், வடை + ஸ்வீட்..அசத்தலான டின்னர்..சப்பாத்திக்கு மெஷின் வேறு வைத்துள்ளனர்.. மாவை போட்டு நம்பர் சொல்லி பட்டனை தட்டினால் சப்பாத்தி பிரிண்ட் பண்ணி வருமாம்….ஒரு நாள் டெமோ பார்க்கவேண்டும்..

நான் சாப்பிட்டது சம்பிரதாயத்தை மீறாத வகையில் கட்டையில் உருட்டி செய்த சப்பாத்தி தான்..பன்னீர் பட்டருக்கு முதல் பரிசு தந்தேன்…

இப்படி ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து உபசரிப்பது புதுமையாக இருந்தது ..பிடித்ததாகவும் இருந்தது. நமக்கு முன்பின் தெரியாதவர்களோடு நெளிந்து கொண்டு இருப்பதற்கு இது நிம்மதி. கோவிட் கட்டுப்பாடுகளையும் கடை பிடித்தது போலாச்சு..கெட் டுகெதரும் செய்தது போலாச்சு..

கண் படாமல் இருக்க கடவுளை வேண்டிக்கொண்டு.. புது இல்லத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு வாழ்த்திவிட்டு கிளம்பினேன்..