நேரத்தையும் நீளத்தையும் கொண்டு நாம் பார்க்கும் காட்சி வடிவங்களை இப்படி பிரிக்கலாம்..

ஷார்ட் பிலிம்/குறும்படம் (எ) மினிமா (படமெடுக்க நேரமில்லை)
சினிமா/திரைப்படம் (பாட்ஷா)
வெப் ஸீரீஸ்/வலைப்படம் (பஞ்சாயத்து)
சீரியல்/தொடர் (ஜன்னல்)
மெகாசீரியல்/நெடும் தொடர் (மெட்டி ஒலி/சித்தி)

நடுநாயகமாக அமர்ந்திருக்கும் வெப் ஸீரீஸ் புது வரவு. அதிமுக ஆட்சியிலிருந்த போன வாரம் வரை நான் எதையும் பார்த்ததில்லை. சினிமாவாகவும் இல்லாமல் சீரியலாகவும் இல்லாமல் இதென்ன அரைகுறை பிரசவம் என சிறு ஒவ்வாமையுடன் ஒதுக்கிவைத்திருந்தேன்.

சீரியல் மெகாசீரியல் என்றால் எனக்கு அலர்ஜி. கடைசியாக பார்த்தது சித்தி. ஒரே வசனத்துக்கு பயாங் பயாங் என்ற பின்னணி இசையில் நவகிரஹங்கள் போல் திசைக்கொன்றாக பார்த்துக்கொண்டிருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷனை கண்கொண்டு பார்ப்பதற்கு பொறுமை இல்லை.

வெப் ஸீரீஸும் இதற்கு ஒன்று விட்ட அண்ணனாக இருக்கும் என்று நானே நினைத்துக்கொண்டதால் பார்க்காமலே இருந்தேன். பஞ்சாயத்து என்ற வெப் ஸீரியஸை பார்த்தேயாக வேண்டும் என்று சீரியசாக பஞ்சவர்ணம் சொன்னதால் பார்த்தேன்..நிஜமாகவே புதுமையாக இருந்தது..

சீரியல் போல பல எபிசோடுகள் பிரித்து எடுத்திருந்தாலும் சீரியலின் அசட்டுத்தனங்கள் இதில் இல்லை. ஏறக்குறைய நீளமாக எடுத்த சினிமாவை சின்ன சின்னதாக வெட்டி வெப் சீரிஸ் ஆக்கி வெளியிடுகிறார்கள் என புரிந்தது…இதுவரை இரண்டு முடித்துவிட்டேன்..இரண்டுமே ஹிந்தி தான்..சப்டைட்டிலோடு..

(1) பஞ்சாயத்து..

பெயரை கேட்டவுடன் ஆலமரம் ..புளிச் என வெற்றிலை எச்சில் துப்ப செம்பு.. கைகட்டி நிற்கும் சம்முவம்..சந்தனம் பூசிய விஜயகுமார் என்ற நாட்டாமை காட்சியோ திரும்ப திரும்ப பேசற நீ.. திரும்ப திரும்ப பேசற நீ.. கண்டிப்பாக நினைவுக்கு வரும்..பஞ்சாயத்து பாலிடாலை குடித்த கதையும் வரலாம்..

ஆனால் நிஜமாக பஞ்சாயத்து என்பது கிராமங்களின் one stop shop அரசு அலுவலகம். உத்திர பிரதேசத்தில் அப்படி ஒரு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பட்டிணத்திலிருந்து ஒரு பையன் முதல் உத்தியோகமாக பஞ்சாயத்து செகரட்டரி வேலைக்கு வருகிறான்.

கிராமத்தில் வந்து மாட்டிக்கொண்டதற்கு நொந்து கொண்டு தப்பிக்க MBA எண்ட்ரன்ஸ் படிக்கும் ஹீரோ..மனைவியின் பினாமியாக கணவன்..கரண்ட் கட்..பேய் பயம் …கல்யாண கலாட்டா..வரதட்சிணை..பெயர் சூட்டல்..ஒண்டிக்கு ஒண்டி சவால்கள்..கிராமங்களின் வினோத விசித்திரங்கள்..

இதமான நகைச்சுவையோடு வெகுளி மனிதர்களின் வாழ்க்கை..மொத்தம் எட்டு எபிசோடுகள்..சிறந்த நகைச்சுவை வெப் ஸீரீஸ் அவார்டும்.. நீனா குப்தா ரகுபிர் யாதவ் ஜிதேந்திர குமார் சிறந்த நடிகர் நடிகைக்கான பிலிம்பேர் அவார்டும் வாங்கியுள்ளனர்..நிச்சயம் பார்க்கலாம்..

(2) Breathe..

இதுவும் எட்டு எபிசோடுகள் கொண்டது..திரில்லர் கதை என்பதால் பட்டும் படாமல் சொல்கிறேன்..

தன் சிறு கவனக்குறைவால் குழந்தையை இழந்து குடிநோயாளியாகி மனைவியை பிரிந்து வாழும் போலீஸ் அதிகாரி ஒரு பக்கம்.. மனைவியை இழந்து யாரேனும் உறுப்பு தானம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் பிள்ளையின் தகப்பன் ஒரு பக்கம்..

பிள்ளைக்காக பெரும் பிழைகளை தகப்பன் செய்ய போக..இருவரும் ஆடும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை…

நோய்வாய்ப்பட்ட பிள்ளையின் தகப்பனாக நமது அலைபாயுதே மாதவன்..தந்தையின் தவிப்பை காட்சிக்கு காட்சி கொண்டு வந்திருக்கிறார்..ஆனால் நீ வாழ பிறரை கெடுக்காதே என்று போதிக்கும் பூமியில் பிள்ளைக்காக அவர் தாண்டும் எல்லைகள் பயமுறுத்துகிறது..

பிரியாணி கடையை உடைத்தாலே CCTV கேமராவில் சிக்கும் காலங்களின் பெரும் குற்றங்கள் எல்லாம் விட்டுபோவதெல்லாம் ஓசோன் ஓட்டைகள்..சஸ்பென்ஸ் ரசிகர்கள் விரும்பும் சீரிஸ் என்பதில் சந்தேகமில்லை..

இரண்டுமே அமேசான் ப்ரைம்ல் பார்த்தவை.. உங்கள் ரெகமெண்டேஷன் இருந்தால் சொல்லுங்கள்!!