சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. அப்படி சொல்ல தெரியாத குழந்தையும் கூட மாஸ்க் என்றால் என்னவென்று சொல்லும்..அதான் இரண்டு வருடங்களாக மாரடிக்கிறோமே..

ஆனால் நான் சொல்ல வந்தது வேறு மாஸ்க்…

பழைய எம்ஜியார் சிவாஜி ரஜினி படங்களில் இந்த காட்சியை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். நல்லவன் என்று ஊரே நம்பிக்கொண்டிருக்கும் கேரக்டர் ஒரு கொலையை செய்யும்.

அதுவும் எப்படி? ஒரு அப்பாவி சிறுவனோ கட்டிபோடப்பட்ட தாயோ பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் கொல்லும். அவர்கள் மனதில் கொலை செய்தவர் இன்னார் தான் என்று பதியவைக்கப்படும்.

பிறகு ஒரிஜினல் ஆசாமியிடம் வந்து ஹா ஹா ஹா என்று சிரித்தபடி முகத்தில் இருக்கும் மாஸ்க்கை கழற்றினால் அங்கே வில்லன் ஒளிந்து கொண்டிருப்பான்.

பல நேரங்களில் ரஜினி போன்ற ஒல்லியான உருவம் மாஸ்க்கை கழற்றியவுடன் தொப்பை உயரம் எல்லாம் மாறியிருப்பது கூடுதல் காமெடியாக இருக்கும்.

அன்று பொய்யான முகமூடி சினிமா கற்பனையில் மட்டுமே சாத்தியம், இன்று நனவாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.”Hyper realistic” mask என்று நாமகரணம் சூட்டியுள்ளனர். ஜப்பானில் கிடைக்கிறதாம்.

இதுநாள் வரை பல லட்சம் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிக்கொள்வதை படித்திருக்கிறோம். புதியமுகம் என்று தமிழில் கூட படம் வந்தது. அதோடு ஒப்பிட்டால் சல்லிசான விலையில் மாஸ்க். இந்திய ரூபாயில் வெறும் 92 ஆயிரம் .

சூடாமணியை கண்டுபிடித்தால் கையை தட்டுவோம் கையை தட்டுவோம் என்று பாடிக்கொண்டு ஒரிஜினல் முகத்தையும் டூப்ளிகேட் முகத்தையும் கண்டுபிடிக்க இருநூத்தி சொச்சம் பேரை ஜப்பானிலும் இங்கிலாந்திலும் உட்காரவைத்து சோதித்ததில் பலர் பெயில். அத்தனை தத்ரூபம்.

சொல்லவும் வேண்டுமா கிரிமினல்களுக்கு வரப்பிரசாதம் தான். முகமாறி கொள்ளைக்காரர்கள் என்று தினத்தந்தி புதியபெயர் வைக்கலாம்.

ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் முகமூடியை மாட்டிக்கொண்டு வீடியோ காலில் சில பலரை மிரட்டி மில்லியன் கணக்கான யூரோக்களை அடித்துக்கொண்டு போயிருக்கிறது ஒரு கோஷ்டி .

ஏர்போர்ட்டுகளிலும் இன்னபிற செக்கியூரிட்டி செக்கிங் நடத்தும் இடங்களிலும் ‘உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க’ இனி நிஜமானாலும் ஆச்சர்யமில்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம்.

முகம் என்ற பெயரில் நாசர் ஒரு படம் எடுத்து நடித்திருந்தார். அசிங்கமான முகம் கொண்ட ஒருவன் முகமூடி உதவியுடன் பிரபலமாகி அதிலிருந்து சொந்த முகத்தை மீட்டெடுக்க தவிப்பது கதை.

நாட்டில் ஏற்கனவே பலர் உள்ளுக்குள் ஒரு முகமும் ஊருக்கு ஒரு முகமும் காட்டிக்கொண்டு வாழ்கின்றனர். இன்னும் இது போன்ற சௌகர்யங்களும் வந்து சேர்ந்துவிட்டால்… சுத்தம்..

நூறு முகம் மாறிவரும் சூரர்களிடமிருந்து ஆறுமுகம் தான் ஊரை காப்பாற்றணும்!!