ஈரோடு செல்ல 30 ரூபாய் டிக்கெட் வாங்கி ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இப்போதெல்லாம் சினிமா டிக்கெட் வாங்குவதற்கு கூட கியூவில் நிற்பதில்லை. ரயில்வே டிக்கெட்டும் அப்படித்தான், ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கி இருபது வருடங்களுக்கு மேலாகிறது. ஆன்லைன் புக்கிங் வந்த பிறகு முன்பதிவு எளிமையாகிவிட்டது.

மூன்று மணி நேரத்துக்கு டிக்கெட் செல்லுபடியாகுமாம். ஒரு fast பாசஞ்சர் வந்தது. மொத்த ரயிலிலும் உள்ள ஆட்களை ஒரே பெட்டியில் உட்கார வைத்தால் கூட பாதி தான் நிரம்பியிருக்கும். ஒரு காலி சீட்டில் கால் நீட்டி உட்கார்ந்தேன். பக்கத்துக்கு ஸீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் பாலிஸி. எதிர் சீட்டுக்கும் பொருந்தும். பொருந்தியது.

செகண்ட் கிளாஸ் என்றாலும் படு சுத்தமாக இருந்தது. பாசஞ்சர் ரயில் என்றாலும் வேகம் இருந்தது. சார்ஜர் சொருக பின்னும் இருந்தது. ஈரோடு ஜங்க்ஷனில் எனக்கொரு சொந்தமும் இருந்தது. அம்மாவின் ஒன்று விட்ட அண்ணா அங்கே கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். சாமிநாத மாமா வரும்போதெல்லாம் சாம்பார் வடையோடும் வாசனையோடும் வருவார்.

பழைய ஞாபகத்தோடு புதிய ஞாபகமும் வந்தது. அண்ணாமலை ரஜினியின் ஜெராக்ஸ் போலிருக்கும் ராஜ் சிவா சுந்தரின் நினைவு வந்தது. ரஜினி சிவா என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் புத்தகம் அனுப்பிய சமயத்தில் ஈரோடு பக்கம் வந்தால் சொல்லுங்கள் சந்திப்போம் என மூன்று மாதம் முன்னர் தான் சொல்லியிருந்தார்.

அவர் நட்பு வட்டம் பெரிது. பொன்னியின் செல்வனை பற்றி நான் எழுதிய பதிவுகள் மூலம் அறிந்தவரில்லை. லேனா தமிழ்வாணனோடு அவருக்கு பழக்கம். ஒரு சிங்கப்பூர் எழுத்தாளர் மூலம் பொன்னியின் செல்வன் சுருக்கம் வந்திருப்பதாக அவர்களின் குரூப்பில் லேனா சொல்ல.. அது நான் தான் என கண்டுபிடித்து வாழ்த்தியிருந்தார்.

ஈரோட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என்பதை விட கொடுமுடியில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்பதே அவருக்கு அதிக அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அன்று காலை மனைவியோடு ஒரு விசேஷத்தில் கலந்து கொண்டு அப்படியே கொடுமுடி வந்து மகுடேஸ்வரரை தரிசித்து அரை மணி முன்னர் தான் ஈரோடு திரும்பியிருந்தார்.

இதில் வேடிக்கையிலும் வேடிக்கையாக நான் கலந்துகொண்ட திருமண மண்டபம் அருகே தான் அவரின் சகோதரர் வீடு. கோவில் அருகே பார்க்கிங் கஷ்டம் என்பதால் தம்பி வீட்டில் காரை நிறுத்தி டூ வீலரில் கோவிலுக்கு போயிருக்கிறார். காசி யாத்திரைக்கு குடை பிடித்து கொண்டிருந்த காட்சியை பார்த்துக்கொண்டே போயிருக்கிறார்.

அடக் கொடுமையே..கொடுமுடியே..முன்னரே தெரிந்திருந்தால் மண்டபத்திலிருந்தே ஹாயாக காரில் வந்திருக்கலாம். பாட்டியோடு பாசஞ்சரில் வரவேண்டும் என விதி இருந்தால்..மாற்ற முடியுமா?..எல்லாம் நல்லதற்கே, அஜினமோட்டோ ரகசியம் தெரிந்திருக்காதே..

முயல்-ஆமை ரேஸில் ரேஸ் முடியும் இடம் நெருங்குகையில் மரத்தடியில் படுத்துக்கொள்ளும் முயல் போல் படுத்தியது ரயில். அது வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து சிக்னலுக்காக ஒரு குட்டி ஸ்டேஷனில் அரைமணி நேரம் காத்திருந்து சாவடித்தது..ஊருக்கு மிகப் பொருத்தமான பெயர் – சாவடிபாளையம்…

ஒரு வழியாக ஈரோடு ஜங்க்ஷன் வந்து ராஜ் சிவாவுக்கு தகவல் சொன்னேன். அடுத்த ஐந்தாம் நிமிடம் வாசலில் கார். ஸ்டீரியோவில் ரஜினி பாட்டு. இருவரும் விசிறிகள். அண்ணாமலை ஹேர் ஸ்டைல் அவருக்கு..அன்றாட ஹேர் ஸ்டைல் எனக்கு. ஆனால் பாட்டு டேப்பில் வரவில்லை. ரேடியோவே ரஜினி பாட்டோடு வரவேற்றது.

ரஜினிக்கு மட்டுமல்ல நல்ல காப்பிக்கும் ரசிகர் ராஜ் சிவா. ஏதோ ஒரு சிறப்பான கடை நோக்கி வண்டியை திருப்பியவரை தடுத்தேன். மதியம் 02:30 காபி நேரம் தான்..எனக்கல்ல அம்மாவுக்கு. கஞ்சிக்குடியாள் என காமாக்ஷிக்கு பெயர் உண்டு.. எனக்கு காப்பிக்குடியான் என்ற பெயர் இல்லை, அவ்வளவு தான் வித்யாசம்.

இளநீர் கடை ஏதானும் தென்படுகிறதா என தேடினேன். ஞாயிற்றுக்கிழமை நல்ல வெயிலான மதியம், ஊரில் ட்ராப்பிக்கே இல்லை. அரசு மருத்துவமனை எதிரே ஒரு பாலத்தை காண்பித்து இந்த ஊரிலேயே இது தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு Fly over என்றார். இதுவும் சமீபத்தில் தான் திறக்கப்பட்டிருக்கிறது.

பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வண்டியை நிறுத்தி இறங்க சொன்னார். ஒரு கடையில் நல்ல கூட்டம். எல்லார் கைகளிலும் கலர் கலராய் கிளாஸ். டாஸ்மாக் இல்லை ஜூஸ்மாக், மாருதி கூல்ட்ரிங்க்ஸ். ABC ஜூஸில் துவங்கி எல்லாவித ஜூசும் கிடைக்கிறது. நான் சாத்துக்குடி சொல்ல ராஜ் சிவா லெமன் கேட்டார்.

சென்னை ஹோட்டல் டம்ளர்கள் மாவு மிஷனை நினைவூட்டும். மேலே அகலமாக இருக்கும். போகப்போக சிம்ரன் இடை போல் சுருங்கிவிடும். அழகு காரணமில்லை அளவு காரணம், கொஞ்சம் ஊற்றினாலே நிரம்பிவிடும். இங்கே அந்த ஏமாற்று இல்லை. தரமும் அபாரம், தாகத்துக்கு தேவாமிர்தமாக இருந்தது.

இன்னொரு ஜூஸும் குடிக்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஒன்றே வயிற்றை நிரப்பிவிட்டது. நிறைய பேசினோம். கும்பகோணம் போய் கோவில்களை சுற்றிவிட்டு வந்த கதைகளை சொன்னதும் சுறுசுறுப்பனார். கபாலியை பார்க்க கிளம்ப சொன்னார். சினிமாவோ..சென்னையில் குடிகொண்டிருப்பவரோ அல்ல.

ஈரோடு – இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?. இந்த ஊரில் குடிகொண்டிருக்கும் சிவன் -ஆர்த்ர கபாலீஸ்வரர். ஆர்த்ரம் என்றால் நனைந்தது, ஈரமானது என்று பொருள். பிரம்மாவின் தலையை கிள்ளி எடுத்த போது அந்த ஈரமான மண்டையோடு அவர் கையோடு தங்கிய கோலம் தான் ஆர்த்ர கபாலீஸ்வரர். ஈர ஓடு .. ஈரோடு.

நான் 04:45 க்கு கோவை எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க வேண்டும். அதற்குள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆர்த்ர கபாலீஸ்வரரை தரிசித்து கிளம்பலாம் என்று ஆர்வத்தை தூண்டினார். 04:15 க்கு கோவில் திறக்கும் உடனே ஸ்வாமியை தரிசித்து அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்டேஷனில் இறக்கி விடுவதாய் சொன்னார். ஓடு.. ஈரோடு ..தேடி ஓடு..

நாங்கள் மூன்றரைக்கே போய் விட்டோம்..ஆனால், கோவில் நாலரைக்கு தான் திறக்கும் என சொல்லிவிட்டனர். கோவை எக்ஸ்பிரஸ் கோவில் வரை வராது என்பதால் வாசலில் இருந்த விநாயகரை வணங்கி..வந்துவிட்டு போனோம், வணங்கிவிட்டு போனோம் என அப்பாவிடம் சொல்லச் சொல்லி கிளம்பினோம்..

தலையை சீவிய தலைவர் என்ற தலைப்பில் பிரம்மாவின் தலையை எடுத்த திருக்கண்டியூர் பற்றி எழுதியிருந்தேன். அங்கே எதிரே ஒரு பெருமாள் கோவில், ஹரசாப விமோசனர். இங்கேயும் பிரம்மாவின் தலையை எடுத்த கபாலி எதிரேயே ஒரு பெருமாள் கோவில், கஸ்தூரி ரங்கநாதர். ஜெயிலர்-பெயிலர் ஜோடி.

கடவுளை தான் பார்க்க முடியவில்லை காபியையாவது பார்ப்போம் என கிளம்பினோம். எனக்கு மீண்டும் மாருதிக்கு போய் இன்னொரு ஜூஸ் குடிக்கத் தான் ஆசை. ஆனால் ஒரு காபி ரசிகருக்காக கூடப்போனேன். கடைக்காரர் கூட சிவனடியார் என அறிமுகப்படுத்தினார். காபியும் அருமை.

போலீஸ்னா ஒரு ஆங்கிள்ல பாக்கணும் என்பது போல் செல்பிக்கு என்றே ஒரு ஆங்கிள் வைத்திருக்கிறார் ராஜ்சிவா. காரில் கியர் லீவருக்கு முன்னால் மொபைலை வைத்து 10 செகண்ட் போஸ் கொடுத்து படம் எடுப்பது அவரின் வழக்கம்..என்னோடும் ஒன்று எடுத்துக்கொண்டார்.

பையனும் பெண்ணும் வெளியூரில் தங்கி மேற்படிப்பு படிக்கின்றனர். அவர்களை மிஸ் செய்யும் பாசமான தந்தை. பண்பான மகன், அம்மாவிடம் அளவு கடந்த மரியாதை. அன்பான கணவனும் கூட..என்ன ஒன்று, பேஸ்புக்கில் போட்டோவை போடாதே என்று சொன்னால் மட்டும் சொல் பேச்சு கேட்பதில்லை.

இது எங்களின் இரண்டாம் சந்திப்பு. மத்யமர் சந்திப்பில் முதல் முறை பார்த்தது..ஒரு ஹலோவோடு போட்டோவோடு சரி. இம்முறை நிறைய அறிந்துகொள்ள முடிந்தது. நண்பர்களுக்காக தன் வேலைகளை மாற்றிக்கொண்டு ஓடி வந்துவிடுவார், இதைப் போல. அதனால் தான் பெரிய நட்பு வட்டம்.

என்னை நட்டாற்றில் நிறுத்தி வைக்க ஆசைப்பட்டார். அது நடக்க முடியாமல் போனது வருத்தம். நண்பரை பற்றி நல்ல விதமாக சொல்லிவிட்டு இப்படியா என யோசிக்க வேண்டாம். காவேரி ஆற்றின் நடுவேயே அமைந்துள்ள கோவில் நட்டாற்றீஸ்வரர். அங்கே அழைத்து செல்ல நேரம் அனுமதிக்கவில்லை.

இரண்டு மணி நேரம் இனிமையாய் கழிய, ஈரோடு ஜங்க்ஷனில் இறக்கி விட்டார். இரவு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தால் கோவில்களை தரிசனம் செய்து விட்டு போயிருக்கலாமே என கரிசனத்தோடு சொன்னார். கோவை எக்ஸ்பிரஸில் செல்வதற்கு ஒரு காரணம் இருந்தது.