வெப்-ஸீரீஸ் என்பது இரண்டரை மணிநேர சினிமாவில் அடக்கிவிட முடியாத அதே நேரம் அதே போன்ற சுவாரசியம் கொண்ட பின்னணியில் புனையப்பட்டதாக இருக்க வேண்டும். சினிமா, கிரிக்கெட்,அரசியல் என்றென்றும் சுவாரஸ்யங்கள் வற்றாத அமுதசுரபி.

இந்திய மக்களின் நாடியை அறிந்தவர்கள் 80% கிரிக்கெட்-10% சினிமா-10% அரசியல் என்ற விகிதத்தில் கலந்து கொடுத்தது தான் Inside Edge வெப்ஸீரீஸ். இந்த தலைப்பை வைத்ததற்கு முதலிலேயே பாராட்டிவிடுகிறேன்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றை புரட்டி பார்த்தால் அது வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாற்றங்களை அடைந்து வந்திருப்பது தெரியும். கபில்தேவ் தலைமையிலான அணி 1983-ல் உலக கோப்பையை வென்ற பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரும் மாற்றத்தை அடைந்தன.

அதை விடவும் பெரிய மாற்றம் 20-20 என்ற புதிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் மூலம் வந்தது. 2007-ல் ICC ஏற்பாடு செய்த முதல் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வெல்ல நாடெங்கும் 20-20 ஜுரம் பிடித்துக்கொண்டது. அரைநாள் கிரிக்கெட்..மாலை தொடங்கி முன்னிரவில் முடிக்க வசதி…

இதுவரை எல்லாமே ஒரே நாடு ஒரே அணி என்று இருக்க கால்பந்து விளையாட்டில் லீக் அணிகள் இருப்பது போல கபில்தேவ் Indian Cricket League (ICL) என்ற தனியார் அமைப்பை நிறுவி 20-20 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் உஷாராகி தானே Indian Premier League (IPL) என்ற அமைப்பை உருவாக்கியது. அதோடு கபில்தேவ் காலிதேவ்.

எட்டு அணிகளை ஏற்படுத்தி ஏலம் போட்டு கிரிக்கெட்டுக்கு ஏழரை சனி பிடிக்க கோலம் போட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட்டில் பேட்டிங் ஒரு பக்கம் நடக்க பெட்டிங் இன்னொரு பக்கம் எப்போதும் நடந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால் பெட்டிங் நடத்துவதற்கே இந்த IPL திருவிழாக்கள் ஆரம்பானதும் எனக்கு கிரிக்கெட் ஆர்வமே வற்றிவிட்டது. மாதா ஊட்டாததை மாங்கா ஊட்டுவது போல கிரிக்கெட் பைத்தியத்தை ஒழி என்று தலைப்பாடாக அடித்து கொண்டபோதெல்லாம் கேட்காமல் இருந்தவனை IPL அந்தாண்டை பக்கம் தள்ளிவிட்டது.

இந்த IPL அணிகளை உருவாக்குவதும்..அதில் அரசியல் புள்ளிகளுக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் தொடர்புகளும்..அதில் நிகழ்த்தப்படும் சூதாட்டங்களும்..அதில் ஏமாறும் அப்பாவிகளும்..வீழ்த்தப்படும் வீரர்களும்..இன்னும் அதை சூழ்ந்திருக்கும் அத்தனை பின்னணி நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது Inside Edge.

ராகுல் டிராவிட்டை நினைவூட்டும் அரவிந்த் வசிஷ்ட்.. விராட் கோலியை நினைவூட்டும் வாயு ராகவன் என இரு முக்கிய வீரர்கள்..இருவரும் நேர்மையை விரும்பினாலும் வயதிலும் குணத்திலும் இருவேறு எல்லைகளில் இருப்பவர்கள்..

அந்த அணியை நிர்வகிக்கும் பாலிவுட் நடிகை ஜரீனா மாலிக்..Analyst சயானி..இவர்களுக்கு மேலே அணியை தந்திரமாக கைப்பற்றும் விக்ரம் தவான் (விவேக் ஓபராய்)..இவர்கள் எல்லாருக்கும் சூப்பர் பாஸ் ‘பாய்ஸாப்’..

இன்னும் உத்தரப்பிரதேசத்தின் ஒரு உள்ளடங்கிய குக்கிராமத்திலிருந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த்..ஜாதியை குத்திக்காட்டி அவனுக்கு உளவியல் டார்ச்சர் கொடுக்கும் சக மாநில சுழற் பந்து வீச்சாளர் தேவேந்திர மிஸ்ரா..இன்னொரு டப்பா அணியை முன்னுக்கு கொண்டுவர துடிக்கும் ஹாண்டா என தனித்துவமான பாத்திரங்கள் பல..

விவேக் ஓபராய் ஓஹோ ராய்..அந்த பணக்கார மிடுக்கும் செருக்கும் ஆணவமும் உச்சம்..வாயு ராகவன் நிஜமான கிரிக்கெட் வீரரே தானோ என மிரள வைக்கிறார்..

சில பல ஓட்டைகள் இருந்தாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத Inside Edge இரண்டு பாகங்களாக வந்துள்ளது..முதல் சீரிஸுக்கு 80ம் இரண்டாம் சீரிஸுக்கு 70ம் தரலாம்..அசல் IPL ஐ போல (அதுவே அசல் தானா என்பது சந்தேகம்..)..இந்த நிழல் IPL ம் விறுவிறுப்பாகவே இருக்கும்..நானே பெட் கட்டுகிறேன்..

அமேசான் பிரைமில் பார்க்கலாம்..