இது சினிமா விமர்சனமல்ல என்றாலும் இரண்டாம் வார்த்தையை வடிவேல் ஸ்டைலில் ‘முடில’ என்று தான் சொல்லவேண்டும். சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு பட்ட பயண அவஸ்தைகளை தான் சொல்கிறேன். யாருக்கேனும் பயனுமாகலாம்.

சென்ற ஜனவரியில் (2020) சென்னைக்கு கிளம்பும் நேரம் வூஹானில் ஏதோ காய்ச்சல் பரவுகிறது என்ற செய்தி கண்ணில் பட்டுக்கொண்டு தான் இருந்தது. ஆனால் ஒரு கெடுபிடியும் இல்லை. திரும்பி வருகையில் தெர்மல் ஸ்கேன்னர் மட்டும் பிசாசு உருவங்களை படம்பிடித்து கொண்டிருந்தது.

பிறகு நடந்ததை பிறந்த குழந்தை தவிர எல்லாருமே அறிவர். உலகமே அரண்டுவிட்டது..புரண்டுவிட்டது. ஊருக்கு திரும்ப வருவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்தியாவிலும் குவாரன்டைன் சிங்கப்பூரிலும் குவாரன்டைன். கேரளா ஸ்ட்ரைக் போல் லாக்டவுன் போய்க்கொண்டே இருந்தது பயமுறுத்தியது.

தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டால் பழைய நிலைமை மாறும் என நினைத்தது நடக்கவில்லை. கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகிறது. இன்னும் இங்கே குவாரன்டைன் நீக்கவில்லை. ஆனால் 10 நாட்களாக குறைந்திருக்கிறது . அவசியம் நான் வந்தே தீர வேண்டிய சூழலில் கிளம்ப முடிவெடுத்த போது தான் இது வழக்கமான பயணம் இல்லை என புரிந்தது.

முதலில் இந்திய ஹைகமிஷன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலை போச்சு/விசா முடிஞ்சு போச்சு/சுற்றுலா வந்து சிக்கிக்கொண்டேன்/கர்ப்பம்-பிரசவம் என்று ஏதானும் ஒரு காரணம் சொல்லவேண்டும். எனக்கு ஏற்ற எந்த காரணமும் இல்லை. வாட்சப் நம்பரில் விசாரித்தேன். எதையானும் போட்டு கொள் என்று பதில் வந்தது. கர்ப்பம் என போடவில்லை.

அடுத்த சோதனை விமான டிக்கெட். சென்னைக்கு தினம் ஆறேழு விமானங்கள் பறந்த இடத்தில் வாரம் இரண்டோ மூன்றோ தான். வந்தே மாதரம் போல வந்தே பாரதம் என்ற பெயரில் ஏர் இந்தியா மட்டும் இயக்குகிறது. வாடிப்பட்டி, வடுகப்பட்டி என்று திசை மாறி செல்லும் டவுன் பஸ் போல் சென்னை, டெல்லி எனவும் போகிறதாம்.

நான் கிளம்பிய தீபாவளி புண்ணிய காலத்தில் இங்கே பள்ளி விடுமுறையும் சேர்ந்து கொண்டது..மூன்று வாரங்களுக்கு டிக்கெட் இல்லை. ஸ்ரீலங்கா வழியாக பத்து மணி நேரம் காத்திருந்து போகலாம் என்று சொன்னான் ஏஜென்ட். பின்னர் பெங்களூர் செல்ல ஒரே ஒரு நாள் இடம் இருப்பதாக சொல்ல உடனே வாங்கிவிட்டேன்..யானை விலை..

அடுத்து RT-PCR சோதனை. அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்கில் கிளம்ப இரண்டு நாள் முன் பாஸ்போர்ட், டிக்கெட், IC எல்லாம் கொண்டு போகவேண்டும். மூக்கில் எதையோ சொருகி மூச்சு விடு தேவா என்று தளபதி ரஜினி போல் மூச்சு விட சொன்னார் டாக்டர். விட்டேன்..அதோடு என்னை விட்டார். தொண்டை பிழைத்தது..

அடுத்த நாள் காலையே நெகட்டிவ் என ரிசல்ட் sms-ல் வந்தது. முழு ரிசல்ட் மதியம் வந்தது. டாக்டரே போன் செய்து மெயில் அனுப்பினார். அவரே மாலை போன் செய்து உன் பையனுக்கும் நெகட்டிவ் என்றது கோவிட் பாசிட்டிவை விட பெரிய அதிர்ச்சியாக இருந்தது. டாக்டரே பஞ்சவர்ணம் காதில் விழுந்தால் என்ற கதி என்றதும் பிழை திருத்தம் செய்தார். பாவம்..அவரே கன்பீஸ் ஆயிட்டார்…

இப்போது மறுபடி கோவிட் ரிசல்ட், வேக்சினேஷன் சர்டிபிகேட், பாஸ்போர்ட் எல்லாவற்றையும் Air Suvidha என்ற இந்திய அரசின் இணைய தளத்தில் ஏற்றி வந்து சேரும் விமான விவரத்திலிருந்து போய் சேரும் வீட்டு விலாசம் வரை பதிவு செய்ய வேண்டும். இதற்கு Self Declaration form என்று பெயர்.

அரசிடமிருந்து ஒரு மெயில் வந்து சேரும். அதில் நாம் அளித்த எல்லா விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் PDF வடிவில் இணைக்கப்பட்டிருக்கும். மறக்காமல் இதையும் இன்ன பிற கோவிட் சர்டிபிகேட், வேக்சினேஷன் சர்டிபிகேட் எல்லாம் பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயண நாளில் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு புறப்படவேண்டும். நான்கு மணி நேரம் முன்னரே செல்வது சாலச்சிறந்தது. என்னவளே அடி என்னவளே பாட்டின் இரண்டு வரிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒத்து போயின. கோவிட் கிளப்பிய பீதி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளையாக உருண்டது.

உலகின் பிஸியான ஏர்போர்ட்டுகளுள் ஒன்று சிங்கப்பூர். பயணிகளை இறக்கி விட டாக்சிகள் நீண்ட கியூவில் இருக்கும். நான் போனபோது அந்த டெர்மினலில் இறங்கிய ஒரே ஆள் நான் தான்.

பயணிகள் அரிதாகவும் நீல பிளாஸ்டிக் கவர் + Face shield அல்லது Goggle அணிந்த பணியாளர்கள் அவர்களை விட அதிகமாகவும் இருந்து அதிசயமாக பார்ப்பதை கண்டு கண்கள் எல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றியது.

உள்ளே நுழைந்ததும் சிக்கல். கோவிட் நெகட்டிவ் என்ற லேப் ரிப்போர்ட்டை நான் கொண்டு போனதை செல்லாது செல்லாது என்று சொல்லிவிட்டது ஒரு மினி போட்ட நாட்டாமினி. என் தவறு தான், Memo on RT-PCR Result என்று அந்த ரிசல்ட்டை படித்து அதன் மீது டாக்டர் வழங்கும் தீர்ப்பு தான் செல்லுபடியாகுமாம்.

கைபேசி கைகொடுத்தது. ஒரு ஆபத்பாந்தவர் என் மெயிலை படித்து அதிலிருந்து லிங்கை பிடித்து ஆன்லைனில் எடுத்து கொடுத்தார். வழக்கமாக செக்கின் எனும் பெட்டியை போடும் சடங்குக்கு முன் இந்த மெமோவையும் Air Suvidha பிரிண்ட்டையும் சரி பார்த்து ஒரு ஒப்பந்தத்தில் கைய்யெழுத்து போட்டால் தான் பெட்டியை வாங்குவார்கள்.

இந்த பயணத்தில் எனக்கு சளியோ சனியோ (கோவிட் தான்) பிடித்துக்கொண்டால் என் விதி. ஏர் இந்தியாவை அதற்கு பொறுப்பாளியாக்க மாட்டேன். எனக்கான மருத்துவ செலவையும் நாடு விட்டு நாடு Deport செய்யவேண்டியிருந்தால் அந்த தண்டச்செலவையும் நானே ஏற்கிறேன். இது தான் ஒப்பந்தம்..

கையெழுத்து போட பேனா கொண்டு செல்லவும். கவுண்டரிணி ஏதோ சொத்தையே கேட்டது போல மறுத்துவிட்டார். ஒரு வழியாக செக்கின் முடித்து ஜன்னலோர சீட் வாங்கிவிட்டேன்..

அத்தனாம் பெரிய ஏர்போர்ட்டில் கிட்டத்தட்ட தன்னந்தனியாக நடந்து போவதே புது அனுபவம்..இம்மிக்ரேஷன் முடித்து உள்ளே நுழைந்தால்..மூடிய கடைகள் வெறிச்சிட்ட வழிகள் ..

சிங்கப்பூர் விமான நிலையத்தை ஒரு முறையேனும் பார்த்தவர்களால் இதை கற்பனை கூட செய்ய முடியாது. கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி உலகத்தையே புரட்டி போடும் அதிசயத்தை அவலத்தை பார்க்க பார்க்க எத்தனை பேரின் உணவை உழைப்பை வீணாக்கிய சரித்திரத்தின் சாட்சிகளாய் நாமே இருக்கிறோமே என்ற வேதனை வார்த்தைகளில் அடங்காது..

முதல் ஆளாய் கேட்டிற்கு வந்துவிட்டேன். மொபைல் இருக்க பயமேன். சார்ஜர் இருக்க கவலை ஏன். ஆனாலும் மூன்று மணிநேரமும் பார்க்க அலுப்பு தான். ஒரு வழியாக விமானம் வந்து சேர உள்ளே அனுமதித்தனர். சாஷேயில் சானிடைசர், மாஸ்க், face shield சீட்டில் இருந்தது. மத்யமருக்கு (நடு சீட் நாயகர்) நீல நிற பிளாஸ்டிக் மேலங்கி. சட்டையை யாரும் சட்டை செய்யவில்லை.

பறக்கையில் படிக்க சுதா மூர்த்தி எழுதிய ஒரு புத்தகம் எடுத்து சென்றிருந்தேன். நடு நடுவே போனில் சேர்ந்திருந்த ஒரு வருட வாட்ஸாப் வீடியோக்களில் தேவையில்லாதை நீக்க துவங்கினேன். பூராவும் குப்பை தான். இடையே ஒரு சிறிய ஸ்வீட் பிரெட், ஒரு சாண்ட்விச் சிறிய பாட்டிலில் நீர் வந்தது. புத்தகத்தை முடிக்கவும் பெங்களூரு வந்துவிட்டது.

அது கொச்சி வரை செல்லும் விமானம். பெங்களூரு சூப்பர் மார்க்கெட் இறங்கு என குரல் கொடுத்தனர். Air Suvidha பிரிண்ட்டை முதலில் வாங்கிவைத்துக்கொண்டு தான் இம்மிக்ரேஷன் செல்ல முடியும். ஒரே விமானம் தான் எனபதால் கூட்டம் இல்லை. உடனே பெட்டியும் வந்து விட்டது. வாசலில் மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பிவைத்தனர்.

சிங்கப்பூரை விட பெங்களூரு விமான நிலையம் பரபரப்பாகவே இருந்தது. சென்னையை தவிர என் பாஸ்ப்போர்ட்டில் சீல் அடிக்கும் பாக்கியம் பெங்களூருக்கு. புது பாஸ்போர்ட் வேறு. சிறப்பாக இருந்தது டாய்லெட் எல்லாம் படு சுத்தம். அங்கிருந்த பணியாளரிடம் பாராட்டு சொல்லிவிட்டு வந்தேன்.

ஏர் இந்தியாவில் Connecting flight இல்லை. நாமே தான் வாங்கவேண்டும். சிங்கப்பூர் விமானம் தாமதமானால் முழு பணமும் எள்ளு. இந்த கோவிட் காலத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் டாக்சி புக் செய்திருந்தேன். பத்து நிமிடத்தில் வந்துவிட்டான். MTR ல் சாப்பிட ஆசைப்பட்டேன் A2B தான் வாய்த்தது. ஏழரை மணிநேரத்தில் சென்னை. ஒரு வழியாக தலையை சுற்றி மூக்கை தொட்டுவிட்டேன்

அப்போதெல்லாம் ஆபீலிருந்து வீட்டுக்கு வருவேன். ஒரு குளியலை போட்டு தயராக இருக்கும் ஹேண்ட் லக்கேஜை இழுத்துக்கொண்டு பஸ் பிடித்து ஸ்டேஷனில் MRT எடுத்தால் ஏர்போர்ட். பட்ஜெட் பிளைட்டில் சென்னை வந்திறங்கி டாக்சியோ ஆட்டோவோ பிடித்து வீடு.

200 டாலருக்கெலாம் சென்னை போய் திரும்பியிருக்கிறேன். இன்று கோவிட் பரிசோதனைக்கே 155 டாலர். அது ஒரு காலம். இப்போது நினைத்து பார்க்க போன ஜென்மம் போல இருக்கிறது.